சாலைகள்,
தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி,
சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை
தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது. இதன்
மூலம் பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு சட்ட
அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த
ஆண்டு மே மாதம், பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அக்டோபர் 2, காந்தி
பிறந்த நாளில், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை
அறிமுகம் செய்து, துடைப்பத்தை கையிலெடுத்தார்.
துாய்மை:
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.
இந்தப் பணியில், மாநில அரசுகளும் தாங்களாக முன்வந்து இணைந்தன. மாநில அரசின் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளின் வளாகங்கள் துாய்மைப்
படுத்தப்பட்டன.சிங்கப்பூர்
போன்ற சில நாடுகளில் இருப்பது போல, துாய்மை பராமரிப்புக்காக சட்டம் கொண்டு
வருவது என முடிவு செய்த மத்திய அரசு, சட்ட அமைச்சகத்திடம் கருத்து
கேட்டது. 'சுகாதாரம், துாய்மை பணிகள் போன்றவை மாநில அரசின் பொறுப்பில்
உள்ளதால், மத்திய அரசு சட்டம் போட்டாலும் மாநிலங்களை கட்டுப்படுத்த
முடியாது' என, சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறை கருத்து
தெரிவித்தது.
எனினும், முன்மாதிரி திட்டம் ஒன்றை வரைந்து, அதை மாநில அரசுகள்
பின்பற்ற வலியுறுத்தலாம்; மாநில அரசுகளுக்கு ஏற்ப, அந்த சட்டத்தில்
வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கலாம் என, சட்ட விவகாரத்துறை
தெரிவித்தது.அதன்படி, மத்திய அரசு, புதிய வரைவு திட்டம் ஒன்றை
வரைந்துள்ளது.
அதில், சுற்றுப்புற சூழலுக்கு ஊறு ஏற்படுத்தும்
வகையில் குப்பை போடுவோர், எச்சில் துப்புவோர், திறந்தவெளியில் மலம்,
சிறுநீர் கழிப்போர் போன்றவர்களுக்கு அபராதம் அல்லது
தண்டனை விதிப்பது என்பது உட்பட சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகாரம்:
இந்த
திட்டம், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்பற்றுமாறு
வலியுறுத்தப்பட உள்ளது.இந்த புதிய திட்டப்படி, சுற்றுப்புறத்தை
மாசுபடுத்துவோரை தண்டிக்கும் அதிகாரம், அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி
அல்லது
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும். இதில், மத்திய அரசின்
தலையீடு இருக்காது. இப்படித் தான், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த
தெருவோர வியாபாரிகள் ஒழுங்கு
படுத்துதல் சட்டத்தில், மத்திய அரசு கூறிய
திருத்தங்களை, மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதால், சுகாதாரம் தொடர்பான
திட்டங்களையும் மாநில அரசுகள் அமல்படுத்த முன்வரும் என்ற
நம்பிக்கை உள்ளது.
ஆக்ராவில் அதிரடி:
சமாஜ்வாதி
கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் ஆக்ரா
நகரில், தாஜ்மஹாலின் அழகை ரசிக்க வருபவர்களுக்கு தர்மசங்கடத்தை
ஏற்படுத்தும் வகையில், தெருவோரங்களில், திறந்தவெளிகளில் சிறுநீர் கழித்த,
100க்கும் மேற்பட்டோர், போலீசாரால் பிடிக்கப்பட்டு, 100 ரூபாய் முதல், 500
ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இதே நடைமுறை, நாட்டின் பிற
சுற்றுலா மையங்கள், முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்
எழுந்துள்ளது.
'பயோ டாய்லெட்' அதிகரிக்கும்:
ரயில்
பாதையில், ரயில்களின் கழிப்பறைகளில் இருந்து விழும் மலம் மற்றும்
சிறுநீர், அந்தப் பாதையின் சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது. இதற்கு மாற்றாக,
'பயோ டாய்லெட்' எனப்படும், கழிப்பறையில் சேரும் கழிவுகளை அழிக்கும்
விசேஷமான பாக்டீரியாவை கொண்ட பெட்டிகள், கழிப்பறைகளின் கீழே
அமைக்கப்படுகின்றன.இந்த வசதி, புதிதாக வடிவமைக்கப்படும் ரயில்களில்
செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள், கூடுதல் ரயில்களில் பயோ
டாய்லெட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்துடன், 17
ஆயிரம் பயோ டாய்லெட்டுகள், ரயில் பெட்டிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதிக்குள், 175 கி.மீ.,யில், டாய்லெட் கழிவுகள்
விடாத வகையில், அந்தப் பகுதியில் ஓடும் ரயில்களின் பெட்டிகளில் பயோ
டாய்லெட் அமைக்கப்பட உள்ளது.
அதுபோல, நடப்பு நிதியாண்டிற்குள், 367 கி.மீ.,
ரயில் பாதையில் கழிவுகள் விழாத வகையில், ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட்
அமைக்கப்பட உள்ளது.குறிப்பாக, ராமேஸ்வரம் - மானாமதுரை,
114 கி.மீ., வழித்தடத்தில், ஜம்மு - கத்ரா, 78 கி.மீ., வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில், பயோ டாய்லெட் அமைக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com