தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுனர்கள் பேசியதாவது...
நியூக்ளியர் மெடிசின், மெட்ராலஜி, காது தொடர்பான மருத்துவம், ஜியாலஜி, வானிலை மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த, க்ளைமேட் சேஞ்ச், பயோ சயின்ஸ், பிரெய்ன் சயின்ஸ் என பல படிப்புகள் உள்ளன. இவற்றை படித்து முடித்தவர்கள், மிக அதிக ஊதியத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.
இதுதவிர JEET, NID, NIFT, SCRA, BITSAT, NIF NEET, CLAT, SAT என, 80 வகையான நுழைவுத் தேர்வுகள் உள்ளன. இதேபோல், மத்திய வணிக அமைச்சகம் சார்பிலான NID நுழைவுத்தேர்வு முடித்தால், படிக்கும் போதே ஊக்கத்தொகையும் உண்டு. சென்னையில், CMI என்ற சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம் சிறுசேரியில் உள்ளது.
டாடா நிறுவனம் நடத்தும், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் படிப்பு உள்ளது. மருத்துவம், மருத்துவம் சார்ந்த இரண்டையும் இணைத்து படிக்கும் படிப்புகள் பல உள்ளன.
ஆடிட்டர் ஜி.சேகர், (சி.ஏ., / ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., ஆடிட்டிங் படிப்பு): எந்த ஒரு பணியும் எளிதல்ல; கஷ்டப்பட்டால் தான் உயர முடியும். ஈசியான படிப்பு எது; ஈசியாக முன்னேறுவது எப்படி என்றெல்லாம் நினைத்தால் முன்னேற முடியாது. இந்தியாவின் முதல் பணக்காரரான, அம்பானியின் வீட்டு மதிப்பு மட்டும் 4,500 கோடி ரூபாய்; அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்.
ஆனால், இப்போதும் தினமும், 16 மணி நேரம் உழைக்கிறார். அப்படியென்றால் நாம் எப்படி உழைக்க வேண்டும் என யோசித்துக் கொள்ளுங்கள். நம்மால் எதுவும் முடியும் என கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.
செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்ப உலக நாடுகள், ஒவ்வொரு திட்டத்துக்கும், 4,500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி, 50 மாதங்கள் வரை கால இலக்கு நிர்ணயித்தன. ஆனால், வெறும், 450 கோடி ரூபாய் நிதியில், 15 மாதத்தில் செயற்கைக்கோள் விட வேண்டுமென்று, இந்தியாவில், மயில்சாமி அண்ணாதுரைக்கு திட்டம் தரப்பட்டது. இதைக் கேட்டு உலக விஞ்ஞானிகள் சிரித்தனர்; ஆனால், 13 மாதங்களில் அவர் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
எனவே, பிளஸ் 2 என்ற அடித்தளம் முடித்துவிட்டு, இப்போதுதான் வாழ்க்கைக் கல்வி கற்க வந்துள்ளீர்கள். நீங்கள் மருத்துவம், பொறியியல் தவிர, சி.ஏ., காஸ்ட் அக்கவுன்டிங், கம்பெனி செகரட்டரிஷிப் படிப்புகளைப் படிக்க கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். இந்தப் படிப்பின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
அதைப்பெற்று, ஜூனில் நடக்கும் தேர்வை எழுதுங்கள். இந்தப் படிப்பு பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புதான். ஆனால், தினமும் வீட்டில் ஐந்து மணி நேரமாவது படியுங்கள். நான்காண்டுகளில், சி.ஏ., பட்டம் பெற்றுவிட்டு பின், இளம் வயதிலேயே, மாதம் 70 ஆயிரம் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். இந்தப் படிப்பு முடித்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.
கல்வியாளர் ரமேஷ் பிரபா, (60 சதவீதம் முதல், 80 சதவீதம் மதிப்பெண் பெற்றால் அடுத்த உயர்கல்வி என்ன?): உலகில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான் முன்னேறினர் என்பதை விட, 60 சதவீதம் முதல், 80 சதவீதம் பெற்றவர்களே அதிகம் சாதித்தனர். அடுத்த உயர்கல்வி குறித்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து பேசி முடிவெடுங்கள். நண்பர் சொல்கிறார், பக்கத்து வீட்டினர் சொல்கின்றனர் என்று படிப்பை எடுக்க வேண்டாம்.
எந்த படிப்பு பிடிக்கும்; எந்த பாடம் வரும் என்பதை பார்த்து எடுங்கள். பெயருக்கு பொறியியல் எடுக்கிறேன் என்று கணிதம், இயற்பியல் மாணவ, மாணவியர் பி.இ., எடுத்துவிட்டு பின், கணிதத்தில் முதல் அரியர் போடக்கூடாது. பொறியியல் எடுத்தாலும் அதையும் கஷ்டப்பட்டு புரிந்துதான் படிக்க வேண்டும். உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற வழியில்தான், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வுசெய்ய முடியும்.
எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டால், இந்திய மருத்துவமான சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் எடுங்கள்; அதற்கு நல்ல மவுசு உள்ளது. பல் மருத்துவம் எடுக்கலாம்; பின், பி.பார்ம் படிப்பு உள்ளது.
பிசியோதெரபி, கண் மருத்துவம், நர்சிங் (ஆண், பெண் இருபாலரும்), கால்நடை மருத்துவம், நாமக்கல் பண்ணைப் படிப்பு, தூத்துக்குடியில் மீன் ஆராய்ச்சித்துறை, வேளாண் படிப்புகள், பி.எஸ்சி., தோட்டக்கலை மூலம், பூ, காய், பழங்களின் விவசாயம், அரசு கவின் கலைக் கல்லூரியில் பெயின்டிங், செராமிக் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் போன்றவை படிக்கலாம். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும், இன்னும் என்ன வரப் போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று பல படிப்புகள் உள்ளன.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்ல பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்க நினையுங்கள். வீட்டுக்கு அருகில் என்று பார்த்து தரமில்லாத கல்லூரியில் சேர்க்காதீர்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com