முல்லை பெரியாறு அணை வழக்கு : பாதுகாப்ப கருதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து நடவடிக்கை எடுத்த கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு ஏற்றவாறு கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு மாநில அரசின் முடிவுகளில் அண்டை மாநிலங்கள் தலையிடக்கூடாது என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனந்த் குழு ஆய்வு : இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், அணை மிகவும் பலமாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தரப்பட்டது. நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை அளித்த பின்னரும், கேரள அரசு தனது போக்கில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு புதிய குழுவை நியமிக்க வேண்டுமென கோர்ட்டில் வலியுறுத்தியது. கேரள அரசின் இந்த வாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் நியமித்த இந்த குழுவானது ஏசி அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், நேரடியாக களத்தில் இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்தனர் என்றும் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்து இருந்தார்.
தீர்ப்பு விபரம் : இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ந் தேதி முடிவடைந்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
முல்லை பெரியாறு தீர்ப்பு விவரம்: முல்லை பெரியாறு அணையின் மட்டத்தை 142 அடிகள் வரை உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது குறித்து, தலைமை நீதிபதி லோதா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பு விவரம்: முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், கேரள அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. எனவே, அந்த சட்டம் செல்லாது. அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லை பெரியாறு திட்டத்தில் புதிய அணை கட்டவும் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தரப்பில் வரவேற்பு: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பை, முல்லை பெரியாறு மீட்பு குழு வரவேற்றுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறி உள்ளது.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com