இதுதொடர்பாக, பி.ஆர்.எஸ்., என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்:பதவிக்காலம் முடிவடைய உள்ள, 15வது லோக்சபாவுக்கு தேர்வான எம்.பி.,க்களில், 79 சதவீதம் பேர் பட்டதாரிகள். ஆனால், புதிய லோக்சபாவுக்கு தேர்வானவர்களில், 75 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள். இவர்கள் தவிர, மீதமுள்ளவர்களில், 10 சதவீதம் பேர், 10ம் வகுப்பு தேறியவர்கள்.கடந்த லோக்சபாவுக்கு தேர்வான எம்.பி.,க்களில், 3 சதவீதம் பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இம்முறை, அந்த எண்ணிக்கை, 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபாவில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 3 சதவீதம். இம்முறை, அந்த அளவு, 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்களில், 28 சதவீதம் பேர் தங்களின் முதன்மையான தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை என்றும், 27 சதவீதத்தினர் விவசாயம் என்றும், 15 சதவீதத்தினர் வர்த்தகம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால், இந்த லோக்சபாவுக்கு தேர்வானவர்களில், 27 சதவீதம் பேர் விவசாயமே பிரதான தொழில் என்றும், 24 சதவீதத்தினர், அரசியல் மற்றும் சமூக சேவை என்றும், 20 சதவீதம் பேர் வர்த்தகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த, 1952ல், நாட்டின் முதல் லோக்சபாவுக்கு தேர்வானவர்களில், வழக்கறிஞர்கள் 36 சதவீதம், விவசாயிகள் 12 சதவீதம், வர்த்தகர்கள் 12 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, பி.ஆர்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் 61 பேர் எம்.பி.,க்களாக தேர்வு: 2009 தேர்தலை விட இரண்டு பேர் அதிகம்:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பெண்கள், 61 பேர், எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது, 2009 தேர்தலில் வெற்றி பெற்ற, 59 பேரை விட, இரண்டு பேர் அதிகம்.இருந்தாலும், லோக்சபாவில் நிறைவேற்றப்படாமல் நிலுவை யில் உள்ள, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அளவான, 33 சதவீதத்தை விட குறைவே. அதாவது, தற்போதைய லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில், 89 சதவீதம் பேர் ஆண்கள்; 11 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். கடந்த, 1977ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில், 19 பெண் எம்.பி.,க்கள் மட்டுமே தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள பெண் எம்.பி.,க்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா, நடிகை ஹேமமாலினி, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா, பா.ஜ., மூத்த தலைவர், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்.பதினாறாவது லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில்,
47 சதவீதம் பேர் (253 பேர்), 55 வயதிற்கு மேற்பட்டவர்கள். 71 எம்.பி.,க்கள், 40 வயதிற்கு குறைவானவர்கள். 2009 லோக்சபா தேர்தலில், தேர்வான எம்.பி.,க்களில், 43 சதவீதத்தினர் மட்டுமே, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள்.டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றவர்களில், மீனாட்சி லெகி என்ற ஒருவர் மட்டுமே பெண். புதுடில்லி தொகுதியில் போட்டி யிட்ட லெகி, ஆம் ஆத்மி வேட்பாளர் ஆஷித் கேத்தனை விட, 1.6 லட்சம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com